June 23, 2024

The தமிழ் Indian

நிஜம் பேசுவோம்

தங்கமணியின் தாறுமாறு வரலாறு !

1 min read

‘‘நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன... மனுஷன் என்ன... ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்’’


‘‘ஒரு அரசியவாதிகிட்ட வேலைக்குச் சேர்கிற எல்லா தகுதியும் உன்கிட்ட இருக்கு’’ –  ’அமைதிப்படை’ திரைப்படத்தில் சத்யராஜ் பேசும் டயலாக் இது! முன்னாள் அமைச்சர்களான செல்வகணபதி, பொன்னையன், செங்கோட்டையன் என மூன்று ஜாம்பவான்களை ஏறி மிதித்துவிட்டு, உச்சாணியில் அமர்ந்தவர் அமைச்சர் பி.தங்கமணி.

நலிந்துவரும் தொழில்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் விசைத்தறி தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்த தங்கமணி, ஜெயலலிதா ஆட்சியில் தொழில் துறைக்கே அமைச்சர் ஆனார்.  நாமக்கல் மாவட்டம் கோவிந்தம்பாளையம்தான் தங்கமணியின் சொந்த ஊர். வால்ராசபாளையத்தில் இருந்து பிழைப்புக்காக கோவிந்தம்பாளையத்திற்கு வந்தார் தங்கமணியின் அப்பா பெருமாள். சாயப்பட்டறை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து பிறகு சொந்தமாகவே சாயப்பட்டறைகள் வைக்கும் அளவிற்கு வளர்ந்தார். அரசியலிலும் பெருமாள் ஆர்வம் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதியான சேலம் கண்ணனின் தீவிர ஆதரவாளர். அ.திமு.க ஒன்றிய பொறுப்பாளராக இருந்த பெருமாள், விசைத்தறி தொழிலில் கவனம் செலுத்தியதால், அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை. 

இரண்டு சகோதரிகளோடு மூன்றாவதாகப் பிறந்த கடைக்குட்டி என்பதால் ‘தங்கமாக’ வளர்ந்தார் தங்கமணி. அதனால், என்னவோ கல்வியில் அவருக்கு ஆர்வம் இல்லை. பி.யூ.சி ஃபெயில் ஆனவருக்குப் படிப்பு ஏறவில்லை. புத்தங்கங்களை தூக்கிப் போட்டுவிட்டு, அப்பாவின் தொழில் பக்கம் தலையை நீட்டினார். தனது சகோதரர்களுடன் பார்ட்னராக சேர்ந்து தொழிலை அபிவிருத்தி செய்திருந்தார் பெருமாள். அப்பாவின் டெக்ஸ்டைல் தொழிலில் தங்கமணி கால் பதித்த நேரத்தில், குடும்பத்தில் நிறை விசைத்தறிகள் ஓடிக் கொண்டிருந்தன. அப்பாவைப் போலவே தங்கமணிக்கும் அரசியல் ஆசை தொற்றிக் கொண்டது.

அப்பாவின் நிறைவேறாத ஆசையை தன் லட்சியமாக்கிக்கொண்டார் தங்கமணி.  அதற்காகக் காய் நகர்த்தி அரசியலில் தீவிரம் காட்டினாலும், கோவிந்தம்பாளையம் கிளைப் பிரதிநிதி என்ற பதவியைத் தாண்ட முடியவில்லை. அடுத்த அடியை எப்படி எடுத்து வைப்பது? எனத் தெரியாமல் குழம்பி நின்றார். அ.தி.மு.க அமைச்சராகச் செல்வாக்கோடு இருந்த செல்வகணபதியின் பி.ஏ சிவசுப்பிரமணியன் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலம் செல்வகணபதியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் தங்கமணி. செல்வகணபதியால் முதல் லிப்ட் கிடைத்தது. பள்ளிப்பாளையம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆக்கப்பட்டார் தங்கமணி.

அப்பாவைப் போல இல்லாமல் அரசியலும் பிசினஸும் தங்கமணியின் மூளையில் ஒருசேரக் கலந்திருந்தது. அரசியலில் ஒரு பக்கம் ஏற தொடங்கியபோது வியாபாரம் ஓஹோ எனக் களைக்கட்டியது. பள்ளிபாளையம் டி.வி.எஸ் மேட்டில் ‘முத்துராம் டெக்ஸ்டைல்ஸ்’ என்ற பெயரில் தங்கமணியின் குடும்பத்தார் கூட்டாகத் தொழில் நடத்தி வந்தனர். ஃபேன்ட், முழுக்கை ஷர்ட் சகிதமாக சிவப்பு கலர் பைக்கில் ஆர்டர் எடுக்க டெக்ஸ்டைல்ஸ் கம்பெனிகளை நோக்கிப் படையெடுத்தார் தங்கமணி. டெல்லி வரை சென்று ஆர்டர் பிடித்தார். இன்னொரு பக்கம் ‘ஸ்ரீ முருகன் பஸ் சர்வீஸ்’ என்ற பெயரில் சொந்தமாக பஸ்களும் ஓடிக் கொண்டிருந்தன. அதே நேரத்தில் அரசியலையும் அவர் விடவில்லை. 

செல்வகணபதியை குருவாக ஏற்று அரசியல் களமாடினார். அவர் வீட்டிற்குத் தவறாமல் போய் அட்டனஸ் போட்டார். செல்வகணபதி ஊருக்கு வந்தால் ரயில்வே ஸ்டேஷனில் வந்து நிற்பார். செல்வகணபதி எங்கே போனாலும் அவரின் நிழலாக பின் தொடர்ந்தார். அவர் எதிரே உட்கார மாட்டார். ஒரு கட்டத்தில் செல்வகணபதியின் மனதில் துண்டை போட்டு கெட்டியாக உட்கார்ந்து விட்டார் தங்கமணி. 

தங்கமணிக்கும் செல்வகணபதிக்கும் இடையிலான நட்புக்கு சாம்பிள் இது. பள்ளிபாளையம் அ.தி.மு.க ஒன்றிய செயலாளராகப் பல வருடங்களாக இருந்தவர் மாரப்பன். சீனியரான மாரப்பனிடம், ‘‘தங்கமணியை ஒன்றிய செயலாளர் ஆக்க விரும்புகிறேன். அவருக்காக நீங்கள் விட்டுக் கொடுங்கள்’’ எனச் செல்வகணபதி கேட்டார். மாரப்பன் தயங்கவே… ‘‘நீங்கள் விட்டுக் கொடுக்காவிட்டால் தேர்தலில் நிற்கவைத்து தங்கமணியை ஜெயிக்க வைப்பேன்’’ எனச் சொல்லி தங்கமணியை ஒன்றிய செயலாளர் ஆக்கினார் செல்வகணபதி. 

1996-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு செல்வகணபதி மீது சொத்துக் குவிப்பு வழக்கு பாய்ந்தது. செல்வகணபதி வீட்டில் ரெய்டு நடந்தபோது தங்கமணியின் வீட்டிலும் பூட்ஸ் கால்கள் நுழைந்தன. ஆனால், போலீஸ் எவ்வளவு துருவி துருவி கேட்ட போதும் விட்டுக் கொடுக்கவில்லை. ’‘செல்வகணபதி அண்ணனைப் போல ஒரு நல்லவரை இந்த உலகத்தில் பார்க்க முடியாது. என்னைப் போன்ற பலருக்கும் உதவியிருக்கிறார்’’ எனக் காக்கிகளிடம் சர்டிபிகேட் கொடுத்தார். 

இதனாலேயே 2001-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் பள்ளிபாளையம் ஒன்றிய சேர்மன் சீட்டை தங்கமணிக்குப் பெற்றுக் கொடுத்தார் செல்வகணபதி. ஜெயித்து சேர்மன் ஆனார் தங்கமணி. அதன்பிறகு அவரால் வளர முடியவில்லை. எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இருந்த திருச்செங்கோட்டைச் சேர்ந்த பொன்னையன் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நிலையில், 2001 சட்டமன்றத் தேர்தலில் திடீரென்று என்ட்ரி கொடுத்தார். வெற்றி பெற்று, ஜெயலலிதா அமைச்சரவையில் மந்திரியும் ஆக்கப்பட்டார். அதோடு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனபாலும் (பிறகு சபாநாயகராக இருப்பவர்) கேபினெட்டிற்குள் நுழைந்தார். இந்த இருவரின் வருகையைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை தங்கமணி. பொன்னையனுடன் தனபாலுடனும் வழியில்லாமல் ஒட்டிக்கொண்டு அடுத்தடுத்த ஸ்டெப்புகளை எடுத்து வைத்தார் தங்கமணி,

வெப்படை ஏரியாவில் மின்சார வாரிய ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்த விவகாரத்தில் தங்கமணியின் பெயரைச் சேர்க்கத் தங்கமணியின் எதிர்த்தரப்பு முயன்றது. செல்வகணபதிதான் அதனைத் தடுத்து நிறுத்தினார். ஒரு கட்டத்தில் பொன்னையன், தனபால் ஆதிக்கத்தைத் தாண்டி தங்கமணியால் வளர முடியவில்லை. அதற்கு மேல் அரசியலில் வளர செல்வகணபதியின் ஆசீர்வாதம் மட்டும் போதவில்லை. அதற்காகப் பல சேனல்களில் முயன்றவருக்கு ‘மன்னார்குடி சேனல்’ கை கொடுத்தது.

பிசினஸ் ஆட்டம் கண்டது. தங்கமணிக்குக் கண்ணைக் கட்டியது. இருட்டில் வழி தேடினார். மன்னார்குடி வெளிச்சம் பாய்ந்தது. சசிகலா குடும்பத்திற்கு நெருக்கமான போலீஸ் அதிகாரி ஒருவரிடம் ஒட்டிக் கொண்டார். அவர் மூலம் இளவரசியின் சம்பந்தி கலியபெருமாளின் ஆசி கிடைத்தது. அப்போது வெற்றி என்கிற ஜோதிடர் ஒருவர் கார்டனுக்கு போய் வந்து கொண்டிருந்தார். அவர் மூலமும் காய்கள் நகர்த்தினார். எல்லா முயற்சியும் சுபமாக முடிந்தது. 2006 சட்டமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் சீட் வாங்கினார். 

இந்த சீட்டை வாங்குவதற்காகத் தங்கமணி நடத்திய அரசியல் சதுரங்கம் பல கிளைகளைக் கொண்டது. அதில், மன்னார்குடி சேனல் ஒரு கிளை மட்டுமே. திருச்செங்கோடு தொகுதி கிடைக்க வேண்டும் எனில், அந்த தொகுதியில் ஏற்கெனவே எம்.எல்.ஏ-வாகவும் அமைச்சராகவும் இருக்கும் பொன்னையனுக்கு மீண்டும் சீட் கிடைத்துவிடக் கூடாது. பொன்னையனை பழிவாங்கவும் வேண்டும்; தனக்குச் சீட்டும் கிடைக்க வேண்டும் எனக் கணக்குப் போட்டார். தொகுதி பக்கமே அப்போது தலைகாட்டாத பொன்னையனுக்கு எதிராக ‘காணவில்லை’ போஸ்டர்கள் திடீரென முளைத்தன. ‘10 ஆண்டுக் காலம் புரட்சித் தலைவர் ஆட்சியில் அமைச்சர். 13 ஆண்டுக் காலம் வனவாசம். ஐந்து ஆண்டுக் காலம் ஆட்டம் ஆடிய பொன்னையனை காணவில்லை’ என்றும் ‘10 ஆண்டுக் காலம் எங்கள் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் சுகம் கண்டாய். 13 ஆண்டுகள் கழகத்தைக் காட்டிக் கொடுத்துப் பிழைப்பு நடத்தினாய். ஐந்தாண்டு அம்மா ஆட்சியில் நீ ஆடிய ஆட்டம் கொஞ்சமா? நஞ்சமா?’ எனவும் திருச்செங்கோட்டில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் போயஸ் கார்டன் வரை கலங்கடித்தன. ‘நாமக்கல் அ.தி.மு.க. பாதுகாப்புப் படை’ என்ற பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்குப் பின்னால் இருந்தது தங்கமணியின் ஆட்கள். 

மன்னார்குடி சிக்னல் காட்டினாலும் பொன்னையனுக்கு எதிராகப் புகார் தட்டினாலும் மாவட்டச் செயலாளர் ஓகே சொன்னால்தான் தேர்தலில் சீட் கிடைக்கும் என்பதால் அதற்கும் தங்கமணி தலை சாய்த்தார். அப்போது மாவட்டச் செயலாளராக இருந்த அன்பழகன் வீட்டு வாசலிலேயே தவம் கிடந்தார். ‘’ அன்றைக்குத் தங்கமணிக்குச் சிபாரிசு செய்தற்காக என்னையே நான் செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும்’’ என பிறகு அன்பழகன் புலம்பியது தனிக் கதை. 

திருச்செங்கோடு ஸீட் வாங்கியாச்சு. ஜெயிக்க வேண்டுமே!  செல்வகணபதி உதவினார். தேர்தல் செலவுக்குப் பணமும் கொடுத்து பிரசாரத்துக்கும் வந்தார் செல்வகணபதி. கும்பிடாத கரங்களே இல்லை. கால் படாத இடங்களே கிடையாது எனச் சொல்லும் அளவுக்குச் சிஷ்யன் தங்கமணிக்காக திருச்செங்கோட்டையே வலம் வந்தார் செல்வகணபதி. ‘‘என்னைவிட ரொம்ப நல்லவர் தங்கமணி. அவரை ஜெயிக்க வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. தங்கமணி ஜெயிச்சா நானே ஜெயிச்ச மாதிரி’’ என நெக்குருகினார் செல்வகணபதி. ‘‘அண்ணன் செல்வகணபதி இலையென்றால் நான் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கவே முடியாது. என் வழிகாட்டி. அரசியல் குரு செல்வகணபதி அவர்கள்தான்’’ எனத் தங்கமணியும் உருக… சென்டிமெண்ட் எமோஷனலாக மாறிப்போனது திருச்செங்கோடு. 

தேர்தலை எதிர்கொண்ட போது தங்கமணியிடம் காசு இல்லை. தெரிந்த தொழிலதிபர்கள், கட்சிக்காரர்கள் எனப் பலரும் தங்கமணிக்கு ‘கை’ கொடுத்தனர். கடன் வழங்கினர். போட்டி கடுமையாக இருந்தது. வெறும் 116 ஓட்டில்தான் தி.மு.க-வின் காந்தி செல்வனை (முன்னாள் மத்திய அமைச்சர்) வீழ்த்தினார் தங்கமணி. இழுபறியிலும் தங்கமணி ஜெயிக்க காரணமாக இருந்தது செல்வகணபதி. ‘மக்கள் பிரதிநிதி’ ஆன பின் தங்கமணியின் சுயரூபம் வெளிப்பட்டது. எம்.எல்.ஏ சீட்டுக்கு சிபாரிசு செய்த அன்பழகனை பிறகு வீழ்த்திவிட்டு, கலியபெருமாள் மூலம் மாவட்டச் செயலாளர் ஆனார் தங்கமணி. நாளடைவில் செல்வகணபதிக்குக் கட்சியில் செல்வாக்குக் குறைய, அவர் 2008-ல் தி.மு.க-வுக்கு தாவினார். அவரோடு பெரும்படை ஒன்றும் இடம் மாறியது. ஆனால், செல்வகணபதியின் சீனியர் சிஷ்யர் தங்கமணி, அந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. செல்வகணபதி தி.மு.க.வில் சேர்ந்ததும்  தங்கமணியின் இதயம் முயல் குட்டியானது. அதாங்க… துள்ள ஆரம்பித்தது. செல்வகணபதியின் இடமாற்றம் அ.தி.மு.க-வில் உண்டாக்கிய வெற்றிடத்தை, தன் சமஸ்தானமாக மாற்றிக்கொண்டார் தங்கமணி. அது மட்டுமா… ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்க, தங்கமணி பேசிய பேச்சு செம பாலிட்டிக்ஸ்!

அ.தி.மு.க-வின் ஆண்டு விழா கொண்டாட்டம் சென்னையில்தான் நடைபெறும். ஆனால், செல்வகணபதி வெளியேறியதால் பலத்தைக் காட்ட முதன்முறையாகச் சென்னைக்கு வெளியே ராசிபுரத்தில் நடத்தி மாஸ் காட்ட நினைத்தார் ஜெயலலிதா. 2008-ல் நடந்த ஆண்டு விழாவில் ஸ்கோர் அடித்தார் தங்கமணி. வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது. ‘‘கட்சியைக் காட்டிக் கொடுத்த ஓர் எட்டப்பன் உங்களைவிட்டுப் போனாலும் லட்சக்கணக்கான ஊமைத்துரைகள் உங்கள் பக்கம்தான் நிற்கிறோம்’’ எனச் செல்வகணபதியைக் குறி வைத்து தங்கமணி வீசிய வார்த்தைகளை ஜெயலலிதா ரொம்பவே ரசித்தார். அவருடைய ‘குட்புக்’கில் இடம்பிடித்தார் தங்கமணி.

திருச்செங்கோட்டில் இருந்து பிரித்து குமாரபாளையம் என்ற புதிய தொகுதி 2011 சட்டமன்றத் தேர்தலில் உருவாக்கப்பட்டிருந்தது. மன்னார்குடி ஆசியோடு அம்மா ஆசியும் சேர்ந்தால்…? சுகபோகம்தான். குமாரபாளையத்தில் ஜெயித்து மந்திரியானார். முதலில் வருவாய்த் துறைக்குப் பொறுப்பு வகித்தவர், அடுத்து தொழில்துறைக்கு மாறினார். செந்தில் பாலாஜி வெளியேற்றப்பட்டதால் போக்குவரத்துத் துறையையும் பிறகு வந்து சேர்ந்தது.  

This logo made for a online magazine, it a voice for a Tamil Indian peoples.