June 23, 2024

The தமிழ் Indian

நிஜம் பேசுவோம்

காதல் சரவணனை தெரியுமா?

 

இவர் முகத்தை சினிமா ரசிகர்கள் யாருமே மறக்க முடியாது.

‘காதல்’ படத்தில் இயக்குநராக வந்து, புதுமுக நடிகர்களிடம் லந்து செய்வாரே, அவரேதான்.

‘காதல்’ சரவணன் என்று சொன்னால், சினிமா வட்டாரத்தில் ஏகத்துக்கும் பிரபலம்.

சினிமாவுக்கு வந்த தன் கதையை சரவணனே சொல்கிறார்.

“தேனிக்கு பக்கத்துல இருக்கும் லட்சுமிபுரம்தான் சொந்த ஊர். சினிமா ஆர்வம் எப்படி வந்துதுன்னு தெரியல. 1988ல் இருந்து போராட்டம்தான். முதல்ல ஒரு பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிச்சேன். நஷ்டப்பட்டேன். பிறகு சீட்டு கம்பெனி நடத்தினேன். அதுவும் ஊத்திக்கிச்சி. சலவை சோப்பு தயாரிக்கிற கம்பெனி நடத்தினேன். டெல்லி, கோயமுத்தூர், திருப்பூர்னு, நான் அலைஞ்சி திரியாத ஊரே இல்ல. எந்த தொழிலும் நமக்கு செட்டாகலையேன்னு புதுசா பேக்கரி கடை வெச்சேன். அதுவும் காலை வாரி விட்டுடுச்சி.

லாட்டரி கடை, வீடியோ கேம்ஸ் கடைன்னு, நான் பார்க்காத தொழிலே இல்ல. எதுவும் செட்டாகததால ஒரு கைரேகை ஜோசியர்கிட்ட பலன் கேட்டேன். ‘நீ நடிகனாத்தான் போவே. ஏன் அதை விட்டுட்டு, பிசினஸ் அது இதுன்னு உன் நேரத்தை வீணடிக்கிறே?’ன்னு திட்டினாரு. ‘அட, இது என்னடா புது வம்பு’ன்னு கொஞ்சநேரம் யோசனையில் இருந்தேன்.

1996ல் டெல்லிக்கு போனேன். அங்கேயும் ஒரு ஜோசியர்கிட்ட பலன் கேட்டேன். அவரும் என் கையை பிடிச்சு சத்தியம் பண்ணாரு, ‘கண்டிப்பா நீ கலைத்துறைக்குத்தான் போவே’ன்னு. எனக்கு ஆச்சரியம். ராத்திரி முழுக்க தூக்கம் வரல. நம்ம மூஞ்சிக்கு சினிமா செட்டாகுமான்னு யோசிச்சேன். ஆனா, திறமை இருந்தா போதும்னு சமாதானப்படுத்திகிட்டேன். 2000ல் சென்னை வந்தேன். ஆனா, அதுக்கு முன்னாடி மோட்டார் பைக், ஸ்கூட்டர் ஏஜென்சி எடுத்து நடத்தினேன். ஆனா, அதுலயும் நஷ்டம் வந்தது.

கோடம்பாக்கம் வந்ததும், சாமியார் மடத்துல இருக்கும் பிரவுன் ஸ்டார் ஓட்டல்ல, சூப்பர்வைசரா வேலை பார்த்தேன். அங்க நிறைய சினிமாக்காரங்க வருவாங்க. அப்படியே சான்ஸ் பிடிக்கலாம்னு ஒரு ஐடியா. ஆனா, நான் நினைச்ச மாதிரி எதுவும் சுலபமா நடக்கல. 2004ல் பாலாஜி சக்திவேல் கிட்ட வாய்ப்பு கேட்டேன். ‘காதல்’ படத்துல அறிமுகப்படுத்தினாரு. அதுக்கு அப்புறம் ஏதோ 70, 75 படம் நடிச்சிட்டேன். ஏதோ சாப்பிடறதுக்கு பஞ்சம் இல்லை.

என் வழுக்கை தலையை பார்த்து, ரொம்ப வயசானவன்னு நினைச்சி, நிறைய பேர் எனக்கு பொண்ணு தரல. அப்பதான் என் மலரை சந்திச்சேன். அவர் ஒரு மாற்றுத்திறனாளி. ஷிமோகாவை சேர்ந்தவர். விருத்தாசலத்தில் படிச்சி, டீச்சர் டிரெய்னிங் எடுத்தாரு. எங்க அன்பான தாம்பத்யத்துக்கு அடையாளமா பையன் விகாஷ் இருக்கான். லைஃப் ரொம்ப கஷ்டமானதுதான். ஆனா, நம்ம கஷ்டங்களை ஷேர் பண்ணிக்கிற மலர் மாதிரி ஒரு நல்ல பொண்ணு மனைவியா கிடைச்சா, மலைபோல இருக்கிற கஷ்டம் எல்லாம் பனிபோல் கரைஞ்சிடும்” என்று பேசிவிட்டு, கை குலுக்கி விடை கொடுத்தார் சரவணன்.

மேலும் கதைகள்