June 23, 2024

The தமிழ் Indian

நிஜம் பேசுவோம்

கலைஞருக்கு சண்முகநாதன் கிடைத்தது எப்படி?

1 min read

இந்த கேள்விக்கு கலைஞரே பதில் அளித்திருக்கிறார். சண்முகநாதனின் இல்ல திருமணம் 2014 ஜூன் 29-ம் தேதி நடைபெற்றது. அந்த திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர், சண்முகநாதனின் அருமை பெருமைகளை குறிப்பிட்டிருக்கிறார்.

சண்முகநாதனைப் பொறுத்தவரையில், அவர் என்னுடைய அலுவலகத்திலே வேலை பார்ப்பவர் அல்ல. என்னுடைய அகத்திலே இருந்து பணியாற்றிடுபவர். ‘அகம்’ என்பதற்கு நீங்கள் கொள்ள வேண்டிய பொருள், உள்ளம் என்பது மாத்திரமல்ல, ‘அகம்’ என்பதற்கு நீங்கள் கொள்ள வேண்டிய பொருள், அது கருணாநிதியினுடைய உள்ளம் என்ற பொருளைக் கொள்வீர்களேயானால்தான், நான் சொன்னது சரிதான் என்று புலனாகும். 

வேடிக்கையாக அல்ல, ‘குட்டி பி.ஏ.’ என்று அவரை அழைத்தார்கள் என்றால், என்ன குட்டி பத்மினி மாதிரி, ‘குட்டி பி.ஏ.’ என்கிறார்களே என்று யாரும் கருதக் கூடாது. அவர் என்னிடத்திலே வந்து பணியாற்றிய பி.ஏ.க்களில் மிக இளையவராக, மிகச் சிறியவராக, சிறிய உடல் படைத்தவராக விளங்கிய காரணத்தால், அடையாளம் தெரிந்து கொள்வதற்காக ‘குட்டி பி.ஏ.’ என்று அழைத்தார்கள்.  அந்த ‘குட்டி பி.ஏ.’ இன்றைக்கு தமிழகத்திலே உள்ள எல்லா பி.ஏ.க்களையும் விட, இவர்தான் ‘கெட்டி பி.ஏ.’ என்று சொல்கின்ற அளவுக்கு அவ்வளவு திறமையானவராக விளங்குகின்றார். 

சண்முகநாதன் எப்படி எனக்கு அறிமுகமானார்? தமிழகத்தில் திமுக ஆட்சி தொடங்குவதற்கான சூழல் உருவாகி, அண்ணா தலைமையிலே அந்த ஆட்சி அமையப் போகிறது என்ற நேரத்தில், அண்ணா அமைச்சரவையில் யார் யார் இடம் பெறுகிறார்கள் என்று குறிப்பிட்டபோது, அவர்களிலே என்னையும் ஒருவராகத் தேர்வு செய்து, எனக்கு யாரை பி.ஏ.வாக வைத்துக் கொள்வது என்று கேட்டபோது, நான் யோசித்துப் பார்த்தேன். அப்போது என்னுடைய கண்களுக்கு, மனத்திற்குத் தென்பட்ட ஒரு உருவம், சண்முகநாதனுடைய உருவம். 

எப்படி திடீரென்று சண்முகநாதனுடைய உருவம் என் நினைவிற்கு வந்தது, என் கண்ணுக்குத் தென்பட்டது? அப்பொழுதெல்லாம் என்னைப் போன்றவர்கள் ஆற்றுகின்ற பொதுக்கூட்ட உரைகளை உடனுக்குடன் படியெடுத்து காவல்துறை மூலமாக அனுப்புகின்ற ஒரு பணி துப்பறியும் இலாக்காவினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்த நேரத்திலே அதுபோல அனுப்பப்பட்ட ஒரு பேச்சுப்படியை நான் பார்க்க நேரிட்டது. அது என்னுடைய பேச்சு, அந்தப் பேச்சை வைத்துக்கொண்டு எங்கள் மீது போலீசாரால் வழக்கெல்லாம் கூட போடப்பட்டது. அப்படிப் போடப்பட்ட அந்த வழக்கு நடைபெற்றபோது, என்ன தவறாகப் பேசிவிட்டோம் என்று வாங்கிப் பார்க்கலாம் என்று அந்தத் தாள்களை வாங்கிப் பார்த்தால், என் பேச்சு, பேராசியருடைய பேச்சு, கழக நண்பர்களுடைய பேச்சுக்களெல்லாம் அந்தத் தாளிலே பதிவாகியிருந்தது. சுருக்கெழுத்தாளர் மூலமாக பேச்சுக்கள் எடுக்கப்பட்டு அந்தப் பேச்சுக்கள் பதிவாகியிருக்கின்றன. ஒரு எழுத்துக் கூட மாறாமல் அந்தப் பேச்சுக்களை நான் சரி பார்த்தபோது, உண்மையிலேயே நான் பேசியதுதான் பதிவாகியிருந்தது. ஒரு எழுத்துக்கூடத் தவறாமல் அத்தனை எழுத்துக்களும் அந்தப் பேச்சுக்களிலே பதிவாகி, அது வழக்கிற்கு வந்தது. 

நான் அந்தப் பேச்சுப்படிகளை பிறகு வாங்கிப் படித்துப் பார்த்தபோது, அச்சாக, சிறிதுகூட தவறாமல் நாங்கள் பேசியது பதிவாகி இருந்ததைக் கண்ணுற்றேன். ’யார் இவ்வளவு சரியாக நாங்கள் பேசியதை இப்படி அச்சு அசலாகப் படியெடுத்திருப்பார்கள்?’  என்று கேட்டபோது, போலீசாருக்கு அதைப் படி எடுத்துக் கொடுத்தவர்களே நம்முடைய சண்முகநாதனைப் போன்றவர்கள்தான். போலீஸ் துறையிலே அவர்களுக்கு குறிப்புகள் எடுத்துத் தருகின்ற சுருக்கெழுத்தாளர்களாகப் பணியாற்றினார்கள். 

ஆட்சி மாறியதும் என்னை, ‘‘நீங்கள் யாரை சுருக்கெழுத்தாளராக வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்?” என்று கேட்டபோது, ‘‘இந்தப் பையனை நான் வைத்துக் கொள்கிறேன்” என்று சொன்னேன். நான் பேசியதை அப்பழுக்கில்லாமல் அப்படியே படி எடுத்து துறைக்கு அனுப்புகிற மிகத் திறமைசாலி என்று பெயரை வாங்கியவர் இந்த சண்முகநாதன் என்பதை அப்போதுதான் தெரிந்துகொண்டேன். 

அப்படி என்னை வந்து சேர்ந்த சண்முகநாதன், எனக்கு ஒரு வகையிலே நீண்ட காலத்திற்கு முன்பே உறவினராக இருந்தவருடைய வீட்டுப் பிள்ளை என்பதும் அபபோதுதான் எனக்குத் தெரிந்தது. அவர் கோதண்டபாணி என்ற என்னுடைய உறவினருடைய மகன். கோ.சண்முகநாதன். அந்த சண்முகநாதனை நான் என்னுடைய பேச்சை படி எடுக்கின்ற உதவியாளராக, மன்னிக்கவும், உதவியாளர்களிலே ஒருவராக நியமித்துக்கொண்டபோது, இந்த அளவிற்கு அவர் வளர்வார், இந்த அளவிற்கு அவர் விளம்பரமாக ஆவார், பலருடைய மதிப்பைப் பெறுவார் என்று நான் கருதவில்லை. யாரோ ஒரு பையன் யாரோ ஒரு பையன், சின்னப் பையன், அவன் நமக்கு இன்றைக்கு உதவியாளராகக் கிடைத்திருக்கிறான் என்றுதான் எண்ணினேன். ஆனால் சண்முகநாதனுடைய வளர்ச்சி என்னை, என்னைப் போன்ற கழகத் தோழர்களை, கழகத் தலைவர்களையெல்லாம் வளரச் செய்கின்ற அளவிற்கு அந்த வளர்ச்சி இருந்தது என்று சொன்னால், அது மிகையாகாது. 

‘‘ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி” என்பார்களே அதைப் போல, தம்பி சண்முகநாதன் ஒரு சாதாரண எழுத்தாளராக, ‘குட்டி பி.ஏ.’ என்று செல்லமாக அழைக்கக்கூடிய ஒரு செயலாளர்களிலே ஒருவராக வந்து என்னிடத்திலே சேர்ந்தவர், இன்றைக்கு என்னிலே ஒரு அங்கமாகவே மாறிவிட்டார் என்று சொன்னால், அதை யாரும் மறுக்க இயலாது. 

அப்படிப்பட்ட சண்முகநாதனால், அவர் ஆற்றுகின்ற பணிகளால் திமுக, ஆட்சிப் பொறுப்பிலே இல்லாவிட்டாலும் எங்களால் வளர்க்க முடிகிறது என்றால், அதற்கு சண்முகநாதனைப் போன்ற சிலர் இன்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகப் பற்றுள்ளவர்களாக இருப்பதுதான்.

சம்பளத்திற்காக வருவது வேறு, அந்த வேலை முடிந்ததும் விடைபெற்றுச் செல்வது வேறு. இவர்கள் சம்பளத்திற்காக வந்தவர்களும் அல்ல, சம்பளம் பெறுவதற்காக எங்களோடு இருப்பவர்களும் அல்ல. இன்றைக்கும் சொல்லுகின்றேன், சண்முகநாதன் இப்போது பி.ஏ. அல்ல, குட்டி பி.ஏ. அல்ல, அவர் என்னுடைய செயலாளர் அல்ல, என்னுடைய எழுத்துக்களை படி எடுப்பவர் அல்ல, என்னுடைய பேச்சுக்களை படி எடுப்பவர் அல்ல. இயக்கத்தோடு கலந்து விட்டவர் இல்லாவிட்டாலும் அவர் என்னோடு இருக்கிறார் என்றால், அவர் இந்த இயக்கத்திலே தன்னை ஒப்படைத்துக்கொள்கின்ற அளவிற்கு என்னோடு கலந்துவிட்டவர், என்னோடு இணைந்து விட்டவர் என்பதாலேதான் இன்றைக்கும் என்னோடு இருக்கின்றார். 

சண்முகநாதனை விட்டால் ஆள் இல்லை ஆனால் இரவு பகல் கண் விழித்து, கண்கள் சிவக்கச் சிவக்க இரவெல்லாம் எழுதி, நான் தூங்கினாலும் தான் தூங்காமல், நான் ஒரு ஊரில் என்ன பேசினேனோ, அந்தப் பேச்சு முழுவதையும் படி எடுத்து, அதை மறுநாள் ‘முரசொலி’ பத்திரிகைக்கும் மற்றும் வேறு நாளேடுகளுக்கும் அனுப்புகின்ற அந்தப் பணியைச் செய்வதற்கு சண்முகநாதனை விட்டால், எனக்கு வேறு ஆள் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக என்னால் சொல்லிக்கொள்ள முடியும். 

அப்படிப்பட்ட அருமைத் தம்பி இரவெல்லாம் கண்விழித்து, நான் தூங்கினாலும் எழுப்பாமல், தூங்கட்டும் என்று எனக்கு ஓய்வு கொடுத்து, நான் ஒரு ஊரிலே ஒரு மணி நேரம் பேசியதை, இரவோடு இரவாக படி எடுத்து எழுதி அதை அச்சுக்கோத்து, அதற்குப் பிறகு அதைப் படிப்பதற்கு ஏற்ற வகையிலே டைப் செய்து, அதை மறு நாள், நாங்கள் கோயம்புத்தூரில் இருந்தாலும், மறுநாள் சென்னையிலே உள்ளவர்கள் படிக்கின்ற அளவிற்கு அதை செய்தியாக, கட்டுரையாக தரக்கூடிய அந்த ஆற்றலும், ஆர்வமும் சண்முகநாதனுக்கு மாத்திரம்தான் உண்டு. 

எத்தனை புயலடித்தாலும்.. எவ்வளவு அடிகள் விழுந்தாலும் சண்முகநாதனைப் போன்ற சிலர் அலுவலர்களாக, காரியமாற்றுகின்ற காரியஸ்தர்களாக இந்தக் கழகத்திலே இருக்கின்ற காரணத்தால்தான், எவ்வளவுதான் அடிகள் விழுந்தாலும், எவ்வளவு பெரிய புயலடித்தாலும், அதையெல்லாம் தாங்கிக்கொள்ளக்கூடிய, சுழன்று சமாளிக்கக்கூடிய அந்த பலத்தை நாங்கள் பெற்றிருக்கின்றோம் என்றால், அதற்கு இந்தத் தூண்கள்தான் காரணம் அதிலே ஒரு தூண்தான் சண்முகநாதன் என்ற தூண். இந்தத் தூண்கள் இருக்கின்ற வரையில் இந்த இயக்கத்தை, இந்த இயக்கத்தினுடைய எழுத்துக்களை, அந்த எழுத்துக்களால் விளைகின்ற எண்ணங்களை, அந்த எண்ணங்களால் பூக்கின்ற மலர்களை யாரும் அழித்துவிட முடியாது.

 
This logo made for a online magazine, it a voice for a Tamil Indian peoples.