July 27, 2024

The தமிழ் Indian

நிஜம் பேசுவோம்

ராம மோகன ராவின் கர்ஜனைகள் என்னாச்சு?

1 min read

மாநில அரசின் உச்சபட்ச அதிகாரியான தலைமைச் செயலாளரே முதல்வரை எதிர்த்து பேட்டி அளித்த தினம் இன்று !

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி உள்ளிட்டவர்களின் வீடுகள், அலுவலகங்களை குறி வைத்து வருமானவரி ரெய்டு நடத்தியது மோடி அரசு. அப்போது பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆவதற்கான முயற்சியில் இறங்கியிருந்தார். அடுத்து முதல்வர் நாற்காலிக்கும் குறி வைத்திருந்தார். இப்படியான சூழலில்தான் ஜெயலலிதா இல்லாத அதிமுக-வை கைக்குள் போட்டுக் கொள்ளத் திட்டமிட்டது மத்திய பாஜக அரசு.
ஜெயலலிதா இருந்த போது ஓ.பன்னீர்செல்வத்திடம் பொதுப்பணித் துறை இருந்தது. மணல் காண்ட்ராக்ட் உட்படப் பல ஒப்பந்தங்கள் சேகர் ரெட்டிக்குப் பன்னீர்செல்வம் வழங்கினார். சேகர் ரெட்டியும் பன்னீர்செல்வமும் திருப்பதியில் ஒன்றாகப் போய் மொட்டை போட்டுக் கொண்ட படம் எல்லாம் அப்போது வெளியானது. இந்த இருவருடன் தலைமை செயலாளராக இருந்த ராம மோகன ராவும் நெருக்கமாக இருந்தார்.
சேகர் ரெட்டி வீட்டை வருமானவரித் துறையினர் சோதனை செய்த போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில்தான் ராம மோகன ராவ் வீட்டை வருமானவரித் துறையினர் சோதனை போட்டார்கள். பன்னீர்செல்வத்தைப் பணிய வைக்கப் பரமபதம் ஆடினார்கள். ராம மோகன ராவ் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்பட 13 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடத்தியது. ராம மோகன ராவ் வீட்டிலும் அவருடைய தலைமைச் செயலக அலுவலகத்திலும் சோதனை போடப்பட்டது. ரெய்டில் பல லட்சம் ரூபாய் பணம், தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
துணை ராணுவத்தின் துணையுடன் கோட்டையில் சோதனை போட்ட போது முதல்வர் பன்னீர்செல்வம் எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை. மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்த போதும் பன்னீர்செல்வம் எதுவும் சொல்லவில்லை. மாறாக ராம மோகன ராவை மாற்றிவிட்டு அந்த இடத்துக்குக் கிரிஜா வைத்தியநாதனை கொண்டு வந்தார் பன்னீர்செல்வம்.
இப்படியான நிலையில்தான் 2016 டிசம்பர் 27-ம் தேதி ஒரு பிரேகிங் நியூஸ் வெளியானது. ’’தமிழக அரசுக்கு ‘கட்ஸ்’ இல்லை’’ என்று பத்திரிகையாளர்களை அழைத்துக் கொதித்தார் ராம மோகன ராவ். வருமான வரித்துறை சோதனைக்குப் பிறகு இந்த பேட்டியை அவர் கொடுத்தார். அப்போது என்னவெல்லாம் பேசினார் தெரியுமா?
* துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில், துப்பாக்கி முனையில் சோதனை நடத்தினார்கள்.
* தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் துணை ராணுவத்தினருக்கு என வேலை. எனது அலுவலகத்திற்குள் மத்திய ரிசர்வ் போலீஸ் படை நுழைந்தது. இதைத் தடுக்காமல் எங்கே போனது தமிழக அரசு
*. ’’தலைமை செயலகத்தில் நுழைந்த வருமானவரித் துறையினரை தடுக்க தமிழக அரசுக்குத் துணிச்சல் இல்லை.
* துப்பாக்கி முனையில் என் வீட்டில் சோதனை நடைபெற்றது. நான் யாராலோ குறி வைக்கப்பட்டிருக்கிறேன். என் உயிருக்கு ஆபத்து உள்ளது.
* வருமானவரித் துறையின் சோதனையில் 25 மணி நேரம் சி.ஆ.ர்பி.எப் போலீசாரால் வீட்டுச் சிறைக்காவலில் வைக்கப்பட்டேன்.
* ஜெயலலிதாவால் நான் பயிற்சி அளிக்கப்பட்டவன்; அம்மா இல்லாத நிலையில் தமிழகம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
* தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் சி ஆர் பி எப் வீரர் வர வேண்டும் என்றால் உள்துறை அமைச்சர் தமிழக முதல்வரிடம் அனுமதி பெற்ற பின்பே வரமுடியும்.
* அம்மா இருந்திருந்தால் தலைமைச் செயலகத்தில் சி.ஆர்.பி.எப் நுழைந்திருக்குமா?
* நான் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் நியமனம் செய்யப்பட்டேன். அம்மா இருந்திருந்தால் சி.ஆர்.பி.எப் உள்ளே நுழைந்திருக்குமா?
* மெரினா கடற்கரையில் அம்மா உறங்கிக் கொண்டிருக்கிறார். அது தெரிந்துதான் கண்டவர்களும் தமிழகத்திற்குக் கால் வைக்கிறார்கள்.
இந்த கேள்விகள் அத்தனையும் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வத்தை எதிர்த்துத்தான் கேட்டிருந்தார் ராம மோகன ராவ். இதற்கு இப்போது வரையில் பன்னீர்செல்வம் பதில் அளிக்கவில்லை. இந்த ரெய்டை வைத்துத்தான் பன்னீர்செல்வம் பணிய வைக்கப்பட்டதாக செய்திகள் எழுந்தன.
கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்ட பிறகும்கூட ’’நான்தான் தமிழக அரசின் தலைமைச் செயலாளர். இப்போது உள்ள தலைமைச் செயலாளர் ஒருவேளை பொறுப்பு தலைமைச் செயலாளராகத்தான் நியமிக்கப்பட்டிருப்பார்’’ என அதிரடியாக சொன்னார் ராம மோகன ராவ். இதற்கும்கூட பன்னீர்செல்வத்தால் பதில் சொல்ல முடியவில்லை.
ராம மோகன ராவின் இந்த பேட்டி வெளிப்படையாகவே முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் அதிகாரத்துக்கு விடப்பட்ட சவாலாகவே இருந்தது. அதற்கு முன்பு நடந்த ஐடி ரெய்டுகள் பற்றியும் ஓபிஎஸ் ஒரு வார்த்தை பேசவில்லை. அந்த மௌனத்திற்குப் பின்னால்தான் தர்மயுத்தம் நடத்தினார். அதற்காக ஆடிட்டர் குருமூர்த்தியை நாடிச் சென்றார். அம்மா ஆன்மா உந்தியது எனப் பொய் சொன்னார். பிறகு துணை முதல்வர் ஆனார். மீதமுள்ள ஆட்சியை நடத்தி முடித்தார். ஐடி ரெய்டுகள் எதுவும் வராமல் பார்த்துக் கொண்டார்.
5 ஆண்டுகள் ஆகிவிட்டது பன்னீர்செல்வமும் ராம மோகன ராவும் எந்த பிரச்னையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

This logo made for a online magazine, it a voice for a Tamil Indian peoples.