July 27, 2024

The தமிழ் Indian

நிஜம் பேசுவோம்

கோட்டை தீக்குளிப்பு முயற்சியும் கே.பி.அன்பழகன் அலுவலக ரெய்டும் !

1 min read

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலம் அது. 2015 செப்டம்பர் 29. சட்டசபை கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்தது. கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் தலைமைச் செயலக வளாகத்தில் தம்பதியினர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.   

அமைச்சர் பழனியப்பனின் சொந்த ஊரான மோளையானூர் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் கிருஷ்ணமூர்த்தியும்  அவரது மனைவி கவிதாவும்தான் பெட்ரோலை  உடலில் ஊற்றி, தீப்பெட்டியைப் பற்ற வைக்க இருந்த கடைசி நொடியில் காப்பாற்றப்பட்டார்கள்.   

’நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, பஞ்சாயத்துத் தலைவர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் என்னை நீக்கியதற்குக் காரணம் அமைச்சர் பழனியப்பன்தான். பழங்குடி இனத்தைச் சேர்ந்த நான், இன்ஜினீயரிங் முடித்திருக்கிறேன். 25 வருடங்களாக, கட்சிப் பணி செய்துகொண்டிருக்கிறேன். 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டுத் தலைவரானேன். அமைச்சரின் சொந்த கிராமம் என்பதால், அவருடைய நண்பர் ராமலிங்கத்தைத் தலைவராகக் கொண்டுவர முயன்றார். அது நிறைவேறவில்லை. இதனால் கோபம் அடைந்த அமைச்சர், தொடர்ந்து எனக்குத் தொந்தரவுகள் கொடுத்துவந்தார். பஞ்சாயத்தில் சாலைகள் போட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த டெண்டரை அமைச்சரின் அண்ணன் வெள்ளியங்கிரி எடுத்திருந்தார். தரமற்ற சாலைகளை அவர் போட்டார். இதைத் தட்டிக்கேட்டதற்கு என்னை மிரட்டினார்கள். உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டேன். இதனால் கொதித்துப்போன அமைச்சர், வார்டு உறுப்பினர்களை தன் பக்கம் திருப்பி, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து என்னை நீக்கிவிட்டார். இதுபற்றி அம்மாவின் கவனத்துக்குக் கொண்டுபோக முற்பட்டபோது அதையும் தடுத்து நிறுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமைச் செயலகத்தில் தீக்குளிப்புப் போராட்டம் நடத்த முயற்சித்தேன்’’ என அன்றைக்கு நீண்ட விளக்கம் கொடுத்தார் கிருஷ்ணமூர்த்தி.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் 2021-ல் வழக்கு ஒன்று போடப்பட்டது. அதனைப் போட்டவர் இதே கிருஷ்ணமூர்த்திதான். அதோடு இன்னொரு வழக்கையும் தொடுத்திருந்தார்.  “மறைந்த முதல்வர் ஜெயலலிதா கார் முன்பு தீக்குளிக்கத் தன்னை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்தான் தூண்டினார். பழனியப்பனுடன் இருந்த அரசியல் மோதலுக்காக, தற்கொலைக்கு முயலும்படி மூளைச்சலவை செய்யப்பட்டேன். அதன்படி தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதா முன்னிலையில், தீக்குளிக்க முயன்று கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டேன். அரசியல் லாபத்துக்காக என்னைத் தற்கொலைக்குத் தூண்டிய கே.பி. அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிப் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. புகார் அளித்ததால் எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. கே.பி.அன்பழகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் சொல்லியிருந்தார் கிருஷ்ணமூர்த்தி.

கே.பி.அன்பழகன் மீதான சொத்துக் குவிப்பு புகார் மீது ஆரம்பக்கட்ட விசாரணை நடந்து வருவதாக நீதிமன்றத்தில் 2021 நவம்பரில் அரசு தெரிவித்தது. தற்கொலைக்குத் தூண்டியதாக கே.பி.அன்பழகன் மீது வழக்குப் பதிவு செய்வது தொடர்பாகப் பதில் அளிக்கவும் போலீஸுக்கு உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

இந்த சொத்துக் குவிப்பு புகாரில்தான் இன்று கே.பி.அன்பழகன் வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகாமகன்கள் ச‌சி மோகன்சந்திர மோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக 11.32 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக வழக்குப்பதிவு செய்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத் துறைகே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையும் நடத்தியிருக்கிறது.