July 27, 2024

The தமிழ் Indian

நிஜம் பேசுவோம்

உங்களில் ஒருவன் விழாவில் என்னவெல்லாம் நடந்தது? வெளிவராத விஷயங்களின் நேரடி ரிப்போர்ட்!

1 min read

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த முக்கியமான நிகழ்ச்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியிட்டு விழா. அதனால் என்னவோ விழாவுக்கு ஏக எதிர்பார்ப்பு.
அழைப்பிதழ் தொடங்கி, அரங்கம் வரையில் அவ்வளவு நேர்த்தியாக விழாவை வடிவமைத்திருந்தார்கள். கார்ப்பரேட், வர்த்தகம், சினிமா நிகழ்வுகள் மட்டுமே நடைபெற்று வந்த சென்னை வர்த்தக மையத்தில்தான் கலர்ஃபுல்லாக விழா நடைபெற்றது. மொத்தம் 1,500 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதால் நிகழ்ச்சியை நேரில் காண திமுகவுக்கு வெளியையும் அழைப்பிதழ்கள் கேட்டு ஏகத்துக்கும் டிமாண்ட். அழைப்பிதழ் வைத்திருந்தவர்களை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். உங்களில் ஒருவன் நிகழ்ச்சிக்கு விளம்பரமும் செய்யப்பட்டிருந்தால் பொது மக்கள் கூட்டம் வேறு வர்த்தக மையத்தின் வாசலில் திரண்டிருந்தது.

மிடுக்காய் நடந்து வந்த நவநீத கிருஷ்ணன் !


அரங்கத்தின் வாசலில் நாகஸ்வர இசைக் கலைஞர்கள் வாசித்துக் கொண்டிருக்க… உள்ளே நுழைந்த உயரமான மனிதரைப் பலரும் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். அவர் அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன். கடந்த மாதம் திமுக முன்னாள் எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன் மகள் திருமணத்தில் பங்கேற்ற நவநீத கிருஷ்ணன், ’’நாடாளுமன்ற நிகழ்வுகள் எப்படி நடைபெறும் என்பதைக் கனிமொழி எனக்குக் கற்றுக் கொடுத்தார்’’ எனப் புகழ்ந்து பேசினார். அது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்த… அவருடைய வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பதவியை பறித்தார்கள் பன்னீரும் பழனிசாமியும். ஆனாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் விழாவிற்கு வந்திருந்தார்.

ஒரே மாதிரியான இருக்கைகள் !

மாநாடு பந்தல்களைப் போடுவதில் கில்லாடியான பந்தல் சிவாதான் மேடை அலங்கார பொறுப்பைக் கவனித்தார். விழா தொடங்கும் கடைசி நேரம் வரையில் டச் அப்புகள் நடந்து கொண்டிருந்தன. மேடையின் பின்னணியில் ஸ்டாலின் இளமைக் கால படங்கள் அணிவகுத்தன. மேடையிலும் சமூக நீதி. முதல்வர் உட்பட அனைவருக்கும் ஒரே மாதிரியான இருக்கைகள் போடப்பட்டிருந்தன.
இம்மாதிரியான விழாக்களில் பார்வையாளர்கள் பகுதியில் முன் வரிசையில் சோபா வடிவில் குஷன் இருக்கைகள் போடப்படுவது வழக்கம். அதுவும் இந்த விழாவில் மிஸ்சிங். மந்திரிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், பத்திரிகையாளர்கள், கட்சியினர் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சேர்கள் வைத்திருந்தார்கள். நட்சத்திர ஹோட்டல் தரத்துக்குச் சிற்றுண்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘’சார்.. இதைச் சாப்பிடுவதற்குக் காசு கொடுக்கணுமா? எனச் சிலர் தயக்கத்துடன் கேட்டுவிட்டு பிறகு எடுத்துச் சாப்பிட்டார்கள். உணவிலும் சமத்துவம்தான்.
விழா தொடங்குவதற்கு முன்பே பார்வையாளர்கள் வந்துவிடுவார்கள் என்பதால் என்னவோ, ராஜேஷ் வைத்யாவின் வீணை இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கருணாநிதி எழுதிய காகித ஓடம் கடல் அலை மீது பாடலோடு ஆரம்பித்தது கச்சேரி. ஓ ரசிக்கும் சீமானே, பொன் மகள் வந்தாள், பனி விழும் மலர் வனம், யார் அந்த நிலவு பாடல்களை இசைத்தார்கள்.

விழாவுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் அரங்கத்திற்குள் நுழையாமல் விருந்தினர்களை வரவேற்பதற்காக போர்ட்டிகோவிலேயே நின்று கொண்டார். விஐபி-கள் ஒவ்வொருவராக வரும்போது அவர்களை நின்றபடியே வரவேற்றார். அனைவரும் வந்த பிறகு எல்லோரும் ஒன்றாக மேடையேறினார்கள். மேடையில் வைக்கப்பட்டிருந்த வாட்டர் பாட்டல்களில் கம்பெனியின் பெயர்கள் பொறிக்கப்பட்ட காகிதம் நீக்கப்பட்டிருந்தது.

அது புத்தக வெளியீட்டு விழா என்ற போதும் அரசியல்தான் பிரதானமாகப் பேசப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய பலரும் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தியே பேசினார்கள். அதனைக் கனிமொழிதான் முதலில் தொடங்கி வைத்தார்.

கனிமொழியும் உதயநிதியும் !


கனிமொழி தனது வரவேற்புரையில் வட இந்தியத் தலைவர்களைக் குறிப்பிடும் போது ஆங்கிலத்திலும் பேசினார். கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குக் கொஞ்சம் தமிழ் தெரியும் என்பதால் கனிமொழி ஆங்கிலத்தில் அவரை பற்றிக் குறிப்பிடவில்லை. முதல்வர் ஸ்டாலின் பேசும் போது அவருடைய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தமிழ் தெரியாத தலைவர்களுக்குத் தரப்பட்ட போது பினராயி விஜயனுக்கும் தரவில்லை.
கனிமொழி தனது வரவேற்புரையில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதியைக் குறிப்பிட்டார். ’’நீட் ஒழிப்பிற்காகக் குரல் கொடுத்துக் களமாடக்கூடிய,உதயநிதி, அவருடைய நெஞ்சுக்கு நீதியிலும் அந்த குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்” எனச் சொன்ன போது மேடையின் எதிரே அமர்ந்திருந்த உதயநிதி சிரித்தபடி கையை உயர்த்தி காட்டினார். இந்த காட்சியை ஸ்டாலின் புன்னகைத்தபடியே கவனித்தார். ’’இந்த மேடை என்பது ஒரு புத்தக வெளியீடு நிகழ்ச்சி மட்டும் இல்லை. இந்த நாட்டை மதவாத சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் தளபதிகளின் அணிவகுப்பு. இந்த மேடை வெறும் ‘டிரைலர்’ தான். படம் இனி வரும்’’ என அரசியலைத் தொட்டார் கனிமொழி.
அடுத்து விருந்தினர்களுக்குச் சால்வை அணிவிக்கும் நிகழ்வு. மேடையில் இந்த பக்கமும் அந்த பக்கமும் நடந்து ஒவ்வொருவருக்கும் சால்வையை அணிவித்தார் உதயநிதி. மகனைப் போலவே தந்தை ஸ்டாலினும் நினைவு பரிசுகளை விருந்தினர்களுக்கு முதல்வர் என்ற மரபையும் தவிர்த்து அவர்களுடைய இருக்கைகள் அருகிலேயே சென்று வழங்கினார்.

வருடத்தை மாற்றிய சத்யராஜ் !


அடுத்து மைக் பிடித்த நடிகர் சத்யராஜ், ‘’ மிசா காலத்தைப் பற்றி ஸ்டாலின் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மிசாவை மட்டும் ஒரு திரைப்படமாக எடுக்கலாம் என்று ஆசைப்படுகிறேன்’’ என்றவர், ’’இந்த மேடை அப்படியே 2023 மேடையிலும் அமர வேண்டும்’’ என்றார். அதாவது அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த தலைவர்கள் கைகோர்க்க வேண்டும் என்று மறைமுகமாகக் குறிப்பிட்டார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் 2024-ம் ஆண்டுதான் நடைபெற வேண்டும் என்பது சத்யராஜுக்கு தெரியவில்லை போலும்.

மேடைக்கு வந்த கோபாலபுரம் வீடு !

கோபாலபுரம் வீட்டின் முதல் மாடியில்தான் கருணாநிதி விருந்தினர்களைச் சந்திப்பார். அவருடைய இருக்கைக்கு பின்புறம் அலமாரிகளில் நிறையப் புத்தகங்கள் இருக்கும். விருந்தினர் சந்திப்பின் போது எடுக்கப்படும் புகைப்படங்களில் அவை தெரியும். அவருடைய டீபாயின் மீதும் நூல்கள் நிரம்பிக் கிடக்கும். அந்த வகையில் பார்த்தால் கோபாலபுரம் ஒரு மினி நூலகம்தான். அதனால், அந்த கோபாலபுரம் இல்லத்தைப் போல அமைக்கப்பட்ட மாதிரி வீடு ஒன்று விழா மேடையில் கொண்டு வந்தார்கள். அந்த
மாதிரி வீட்டின் உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்த உங்களில் ஒருவன் நூலை ஸ்டாலின் எடுத்து நீட்ட ராகுல் காந்தி வெளியிட்டார். மாதிரி வீட்டிற்குள் ராகுல் காந்தியே கையை நுழைத்து புத்தகங்களை எடுத்து அனைவருக்கும் கொடுத்தார்.
பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ’’தமிழகத்தில் உள்ள சமூகநீதி, நியாயம், நீதி, ஒற்றுமையை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. இங்கு ஒரு வித்தியாசமான சமூகத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்து ரசிக்கிறேன்’’ என்றார்.

துரைமுருகனும் ராகுல் காந்தியும் ரொம்ப கேஷுவலாக பேசிக் கொண்டிருந்தார்கள். உங்களில் ஒருவன் புத்தகத்தில் உள்ள படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த ராகுல் காந்தி அந்த படத்திற்கான விளகத்தை அருகிலிருந்த துரைமுருகனிடம் கேட்டு விளக்கம் பெற்றுக் கொண்டிருந்தார். அவையில் சிரிப்பொலி எழுந்தால் உடனே துரைமுருகனிடம் ராகுல் காந்தி விளக்கம் கேட்டார்.
’’இந்தியா தனது புருவங்களை உயர்த்தி பார்க்கும் மேடையாக இதைப் பார்க்கிறேன். திராவிட மாடல் இந்தியாவை ஒன்றுபடுத்தும் சக்தியாகக் கூட நாளை திகழலாம். இந்தியா முழுவதும் சமத்துவம் பரவுவதற்கு இந்த திராவிட மாடலை கட்டி அமைத்துக் கொடுத்து இருக்கிறார் மு.க.ஸ்டாலின்’’ ’ என்று பேசினார் வைரமுத்து.
அடுத்து பேசிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, ’’ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு தொடங்கிய ஒடுக்குமுறை இந்தியா முழுவதும் நடைபெறப் போகிறது. ஜம்மு காஷ்மீர் என்கிற எங்களது மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து போட்டார்கள். இதேபோல் தமிழகம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது என்று திடீரென அறிவிக்கப்படாது என்று என்ன நிச்சயம்’’ எனச் சொல்லி அதிர்ச்சி கொடுத்தார்.

’’என் தலைவர் கலைஞரிடம் நாங்கள் எப்படி இறுதி வரை இருந்தோமோ, அதேபோன்று எங்கள் மூச்சு இருக்கும் வரை தலைவா உன்னிடத்தில் நாங்கள் நன்றியோடு இருப்போம்’’ எனத் தழுதழுத்தபடியே சொன்னார் அமைச்சர் துரைமுருகன்.
தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு பேசும் போது, ‘’நேரடியாகப் பார்க்கும் போது வேற்றுமைகளை மறந்து கட்டிப்பிடித்துக் கொள்கிறோம். ஆனால், தேர்தல் வந்தால் தனித்தனியாக நிற்கிறோம். இனிமேலாவது நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து மதவெறியைக் கொண்டு ஆட்டம் போடுகிற கூட்டத்தை இந்த தடவையோடு முடித்து வைக்க வேண்டும். இனிமேல் அவர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்றால் எல்லோரும் ஒன்று சேருங்கள்’’ என்று அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு அணி திரட்டினார்.
டி.ஆர்.பாலு பேச்சை வழி மொழிவது போல இருந்தது கேரள முதல்வர் பினராயி விஜயனின் உரை. ‘‘ஜனநாயகத்தின் பாதுகாப்புக்காக அனைவரும் ஒன்று திரள வேண்டிய நேரம் இது’’ என்றார்.

கூகுள் செய்து பார்த்த சோனியா காந்தி !


ராகுல் காந்தி பேச அழைக்கப்பட்ட போது இரண்டு போடியத்தையும் பார்த்து எதில் பேச வேண்டும் எனச் சைகை காட்டினார். எதிலும் பேசலாம் எனத் தலைவர்கள் சொன்னதும் ஒரு போடியத்தை நோக்கி வேகமாக நடந்தார். விழாவில் ராகுல் காந்தியின் பேச்சுதான் ஹைலைட். ’’ஸ்டாலினுக்கு 69 வயது என்றபோது என் தாயார் நம்பவே இல்லை.. கூகுள் செய்து பார்த்தார். எப்படி இளமையாக இருக்கிறேன் என்று ஸ்டாலின் இன்னொரு புத்தகம் எழுத வேண்டும்” என ராகுல் காந்தி சொன்ன போது ஸ்டாலின் முகத்தில் பிரகாசமான சிரிப்பு.
’’நீதித்துறை, தேர்தல் ஆணையம், பத்திரிகை துறை திட்டமிட்டு ஒவ்வொன்றாக நசுக்கப்படுகின்றன. பா.ஜ.க. எந்த கற்பனையான உலகிலும் வாழவேண்டாம். அவர்களை எப்படி யுத்தம் செய்து, தோற்கடிக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்’’ என்று அரசியலும் பேசினார்.
’’தமிழ்நாட்டுக்கு வருவது எப்போதும் மகிழ்ச்சி தரும் ஒன்று. இதை என்னுடைய அடி மனதிலிருந்து சொல்கிறேன். ஏனென்றால் என்னுடைய ரத்தம் தமிழக மண்ணில் கலந்திருக்கிறது’’ என்ற போது அரங்கம் அதிர்ந்தது. ஸ்டாலின் அதனை ரொம்பவே ரசித்தார்.

ராகுலின் கன்னிப்பேச்சும் கருணாநிதியும் !


ராகுல் காந்தி தனது அரசியல் வருகையை 2004 நாடாளுமன்றத் தேர்தலில்தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தந்தையின் தொகுதியான அமைதியில் ராகுல் காந்தி முதன்முறையாகப் போட்டியிட்டார். ராகுல் காந்தியின் அன்றைய கன்னிப்பேச்சைக் கூட்டணியிலிருந்த கருணாநிதி வரவேற்று ’ராகுல் காந்தியின் பேச்சு கண்ணீரை வரவழைக்கிறது’ என்று முரசொலியில் எழுதினார். அப்படியான ஒரு உரையை உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி பேசிய போது ஸ்டாலின் கண்கள் ஆனந்தக் கண்ணீரில் நனைந்திருந்தது.

இறுதியாக முதல்வர் ஸ்டாலின் பேசினார். ‘’தலைவரைப் போல் எனக்கு எழுதவும், பேசவும் தெரியாது, அவரை போல எழுதும் முயற்சியில் ஒன்றுதான் என் சுயசரிதை புத்தகம். உயர்ந்த பொறுப்புகளுக்குச் சென்றாலும், உங்களில் ஒருவன்தான் நான். மு.க. ஸ்டாலின் அரசியலுக்கு வராமல் போயிருந்தால் என்னவாகி இருப்பீர்கள் என என்னிடம் கேட்டார்கள் நான் அரசியலில்தான் இருந்திருப்பேன் என பதில் சொன்னேன் அரசியல் என்பது எனது ரத்தத்தில் கலந்தது. திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைப்பதை எனது பணியாக மேற்கொள்வேன்’’ என்றார்.