July 27, 2024

The தமிழ் Indian

நிஜம் பேசுவோம்

ரஜினிக்கு ரசிகர் கடிதம்!

1 min read
  தர்மத்தின் தலைவனே! நான்தான் ‘பாயும் புலி’ பரணி பேசுறேன். என் பதிமூணு வயசு வரைக்கும் பரவை பரணிதரனா இருந்தவன், ‘பாயும் புலி’ பார்த்ததுலேருந்து ‘பாயும் புலி’ பரணி ஆயிட்டேன். என்னை உனக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. மதுரை நடனா தியேட்டரிலே ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தோட கட்டவுட்டுக்கு குடத்தோட மேலே ஏறி பால் ஊத்தி, கால் தவறி விழுந்தப்போ நான் பத்தாங்கிளாஸ் படிச்சிக்கிட்டிருந்தேன். கால் உடைஞ்சிட்டதாலே பத்தாவது பரிட்சை கூட எழுத முடியலை. என்னிக்கு உனக்கு ரசிகன் ஆனோமோ, அன்னிக்கு விழுந்தவனுங்கதான். இன்னிக்கு வரைக்கும் எழுந்துக்க முடியலை. ரசனையிலே மட்டுமில்லை தலைவா. வாழ்க்கையிலும்தான். பரவை பரணின்னு மதுரைப் பக்கம் மன்றத்துலே கேட்டுப் பாருங்க. ரஜினி படத்துக்கு முதநாளே பத்தாயிரம் ரூவாய் செலவு பண்ணி சீரழிவானே, அவனான்னு கேட்பானுங்க. ‘அண்ணாமலை’ சமயத்துலே உன்னை காரைவிட்டு இறங்கவெச்சி நடக்க வெச்சானுங்க அப்போதைய அதிமுககாரனுங்க. அதைக் கேள்விப்பட்டு மதுரையிலே மறியல் பண்ணது யாரு? நம்ம பசங்கதான். ‘நேற்று தளபதி, இன்று மன்னன், நாளை?’-ன்னு வாசகம் போட்டு போஸ்டர் ஒட்டுங்கடான்னு அண்ணன் சத்யநாராயணன் ஒவ்வொரு ஊருக்கும் போன் போட்டு சொன்னாரு. ‘உழைப்பாளி’ படத்துக்கு மதுரையில் தொடங்கி திண்டுக்கல்லு வரைக்கும் சைக்கிளிலேயே போய் எட்டு பிட்டு போஸ்டர் ஒட்டினோம் தலைவா. எதுக்கு? நீ அரசியலுக்கு வரப்போற, மன்னாதி மன்னனா நாட்டை ஆளப்போற. மக்களுக்கெல்லாம் நல்லது செய்யப் போறேங்கிற நம்பிக்கையிலேதான். ‘ரஜினி, ரஜினின்னு அலையுறீயே, வேலை வெட்டிக்கு போய் நாலு காசு சம்பாதிக்க வேணாமா ராசா?’ எங்காத்தா கேட்டப்போ, தலைவரு ஆட்சிக்கு வருவாரு. ரசிகன் எல்லாத்துக்கும் அரசு வேலை தருவாருன்னு நம்பிக்கையோட பதில் சொன்னேன். ஏன்னா, அப்போ அப்படிதான் மன்றத்து ஆளுங்களுக்கு மேலிடத்திலிருந்து தகவல் சொல்லப்பட்டது. ‘பாட்ஷா’ படம் ரிலீஸ் ஆனப்போ, மதுரை அம்பிகை தியேட்டருலே முதல் மாசம் முழுக்க டெய்லி ஒரு ஷோ பார்த்தேன். அதுக்கப்புறம் அது இங்கே 175 நாள் ஓடினவரைக்கும் வாரத்துக்கு ஒண்ணு, ரெண்டு ஷோ பார்த்துக்கிட்டே இருந்தேன். ‘பாட்ஷா’ பார்க்க நான் பண்ணின செலவுக்கு, அப்போ மதுரைக்கு வெளியே அரை கிரவுண்டு நிலமே வாங்கிப் போட்டிருக்கலாம். நீங்க பாட்டுக்கும் தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரிச்சிடிச்சின்னு பாட்ஷா விழாவில் பேசிட்டீங்க. அதிமுக காரனுங்க ஊர் ஊரா ரஜினி ரசிகனை தேடித்தேடி அடிச்சானுங்க. தெரியுமா தலைவரே? அண்ணன் சத்யாவைக் கேளுங்க. அவர்கிட்டே எங்கிட்டு கேட்குறது. அவர் இருந்திருந்தா நீங்க உருப்பட்டுடுவீங்களோ, ரசிகனை வாழவெச்சுடுவீங்களோங்கிற நல்லெண்ணத்துலேதான் நம்ம அண்ணி விரட்டி அடிச்சிட்டாங்களே? 96லே நீங்க கட்சி ஆரம்பிக்கிறது உறுதின்னுதான் திருநெல்வேலி வரைக்கும் பேச்சு. அப்போதான் எனக்கு கல்யாணம் ஆகியிருந்தது. பொண்டாட்டி நகை நட்டையெல்லாம் அடகு வெச்சு மன்றவேலை பார்த்தேன். திடீர்னு பார்த்தா சோ சொன்னாருன்னு திமுக – தமாகாவை ஆதரிச்சி வேலை செய்ய சொல்லிட்டீங்க. பிரச்சாரம் செய்ய அவங்க காசெல்லாம் கொடுத்தாங்க. நாங்கதான் வாங்கலை. ஏன்னா, எங்க தலைவர் நேர்மையானவரு. நாங்களும் அப்படிதான் நேர்மையா இருப்போம்னு சொன்னோம். அந்தக் காலத்துலே அப்படிதான் நம்பினோம். ‘பாபா’ வர்றப்போதான் அந்த நம்பிக்கை கொஞ்சம் ஆட்டம் கண்டுச்சி. உன் படத்தை டீஷர்ட்டுலே நாங்க பிரிண்ட் பண்ணக் கூடாதுன்னு சொன்னாங்க. உன்னை காப்பிரைட் பண்ணிக்கிட்டாங்களாம். அவங்களே கொள்ளை லாபத்துக்கு டீஷர்ட் வித்தாங்க. தொப்பி, பேட்ஜ்ஜுன்னு உன்னை தெருவுலே போட்டு வித்தாங்க தலைவா. தெரியுமா உனக்கு? அப்போ பாமககாரங்க கிட்டே வேற ஏதோ சண்டை போலிருக்கு. கடலூர் பக்கத்து மன்றத்து ஆளுங்களையெல்லாம் செம அடி அடிச்சானுங்க. தலைவருக்கு ரசிகனா இருந்தா, நமக்கு சம்மந்தமே இல்லாத விஷயத்துக்கெல்லாம் அடியும் வாங்கணும் போலன்னு அப்போதான் தெரிஞ்சுக்கிட்டோம். எந்த ஜெயலலிதா ரசிகனுங்களை பாடாய்ப் படுத்தினாங்களோ, போலீஸை விட்டு தேடித்தேடி பொய் கேஸ் போட்டாங்களோ, அந்த ஜெயலலிதாவுக்கே ஓட்டு போடணும்னு 2004லே மேலிடத்துலே இருந்து தகவல் வந்தது தலைவா. ஒருவேளை தலைவர் ஒப்புதல் இல்லாம வந்திருக்குமோன்னு நெனைச்சா, தலைவரே அந்தம்மாவை தைரியலட்சுமின்னுதான் சொல்லுறாருன்னு ஒரு போடு போட்டாங்க. நெஞ்சே வெடிச்சிடும் போல ஆயிடிச்சி. சிவாஜி படத்துலே தலைவர் கருப்புப் பணத்தை ஒழிக்கிறாருன்னு எங்களுக்கு அடுத்த தலைமுறை ரசிகனுங்க கூட்டம் கூட்டமா தியேட்டருக்கு வந்தானுங்க. ‘உங்க தலைவர்தாண்டா கருப்புப் பணக் கூட்டத்துக்கே அதிபதி’ன்னு கமல் ரசிகனுங்கள்லாம் எங்களை கண்டமேனிக்கு ஏசினானுங்க. பதில் சொல்ல முடியலை. ஏன்னா, அப்போ நீங்க வாங்கின சம்பளம் அப்படி. நாங்கள்லாம் உங்களுக்கு ரசிகனா தியேட்டருக்கு தியேட்டர் காவடி தூக்கிட்டிருந்தப்போ, நீங்க படிப்படியா முன்னேறி ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்குற நடிகரா உருவெடுத்திட்டீங்க. சரி, நம்ம தலைவர்தான் நிறைய சம்பாதிச்சிட்டாரே நமக்கு ஏதாவது செய்வாருன்னு எதிர்ப்பார்த்தா, உங்க பொண்ணு கல்யாணத்துக்கு கூட கூப்பிடலை. ஏன்னு கேட்ட ரசிகனுங்களுக்கு உங்களுக்கெல்லாம் தனியா பிரியாணி போடறேன்னு சொன்னீங்க. தலைவரே, என் பொண்ணுக்கே கல்யாணம் பண்ணி விருந்து போடற காலம் வந்தாச்சி. நீங்க எப்போ எங்களுக்கு பிரியாணி போடப்போறீங்க? முப்பது வருஷத்துக்கும் மேலே இங்கே கிணறு தோண்டிட்டோம். தண்ணி வந்துடும் என்கிற நம்பிக்கையையே இழந்துட்டோம். திடீர்னு நாலு வருஷம் முன்னாடி ‘கட்சி ஆரம்பிக்கப் போறேன்’னு நீங்க சொன்னதுமே மறுபடியும் எங்களுக்கு நம்பிக்கை துளிர் விட்டிச்சி. வெள்ளையும், சொள்ளையுமா நாமெல்லாம் ஊர்லே நடமாடப் போறோம். ரஜினி கட்சிக்காரன்னு ஜனங்க கவுரதையா கூப்பிடப் போறாங்கன்னு ஜமாவா இருந்தோம். மறுபடியும் போஸ்டர், கட்டவுட்டுன்னு உன் படங்களுக்கு அமர்க்களமா செலவு பண்ணோம். என்ன பிரயோசனம்? மூணு வருஷமா அறிவிப்பே இல்லை. புள்ளை பெக்குறதுக்கு கூட பத்து மாசம்தான் தலைவரே. யாராவது அரசியலுக்கு வர்றேன்னு அறிவிச்சிட்டு இத்தனை வருஷமா கட்சியைத் தொடங்காம ஆறப்போடுவாங்களா? திடீர்னு கட்சியை அறிவிச்சிருக்கீங்க. சரி, நமக்கு விடிஞ்சிடிச்சின்னு நெனைச்சா… கட்சிக்கு சம்பந்தமே இல்லாத தமிழருவி மணியன் மேற்பார்வையாளராம். முத முதல்லே கருப்புப்பண முதலைன்னு உங்களை நோக்கி கைகாட்டினதே இந்தாளுதான் தலைவரே. அதுக்குள்ளே மறந்துட்டீங்க அல்லது அவரு அப்படி எழுதினதை உங்க பார்வைக்கு யாருமே கொண்டுவரலையா? அப்புறம் ஒருங்கிணைப்பாளருன்னு பாரதிய ஜனதா கட்சியிலேருந்து யாரோ ஒருத்தரை செவப்பா கொண்டு வந்தீங்க. அதுக்கு நம்ம ரசிகர் மன்றத்து சுதாகாரண்ணனே தேவலாம். ஆளு கொஞ்சம் சுடுமூஞ்சியா இருந்தாலும் நெஜமாவே உங்களுக்கு விசுவாசிதான். அந்த அர்ஜூன மூர்த்தி உங்களுக்கு போஸ்டர் ஒட்டினாரா, கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணாரா, ‘அண்ணாமலை’ வந்தப்போ அதிமுககாரன் கிட்டே அடிதடிக்குப் போனாரா, ‘பாபா’ சமயத்துலே பாமககாரன் கிட்டே சண்டை போட்டு பல்லு உடைச்சிக்கிட்டாரா? எதுக்கு அந்தாளுக்கு பதவி? முப்பது வருஷத்துக்கும் மேலே உங்களுக்கு மூட்டை சுமந்த நாங்கள்லாம் மூலையிலே கிடக்கணும். எங்கேயோ கிடந்த குருமூர்த்தி கை காட்டுறவனுக்கெல்லாம் நீங்க ஆரம்பிக்கிற கட்சியிலே பதவி கொடுக்கணும். எந்த ஊரு நியாயம் தலைவரே இது? சரி. யாரையோ வெச்சி எதையோ செய்யுங்கன்னு இருந்தா, திடீர்னு கொரோனாவை காரணம் காட்டி, கட்சி ஆரம்பிக்கலைன்னு எங்களையெல்லாம் மறுபடி நடுத்தெருவுலே நிறுத்திட்டீங்க. 1996லேருந்து லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது – ஆனா வரவேண்டிய நேரத்துக்கு வருவேன், நேரா வருவேன், சைடுலே வருவேன்னுலாம் நீங்க ஆடின ஆட்டத்துக்கெல்லாம் ஈடு கொடுத்து வந்தவனெல்லாம் பொண்டாட்டி, புள்ளையையெல்லாம் அனாதையா விட்டு இன்னிக்கு அனாதை மாதிரி நிக்கிறோம். எங்களை என்னிக்காவது கேட்டுக்குள்ளே வர அனுமதிச்சிருப்பீங்களா தலைவரே? ஆனா நீங்க கட்சின்னு சொல்லுறப்போல்லாம் கட்டெறும்பு மாதிரி எங்கிருந்தோ வந்தவனுக்கெல்லாம் போயஸ் கார்டனில் முதல் மரியாதையா? 70 வயசுக்கு மேலே நீங்க கட்சி ஆரம்பிச்சிதான் நாங்கள்லாம் வயிறு வளர்க்கணும் என்கிற நிலையிலே இப்போ நாங்க யாருமில்லை தலைவரே. உங்களுக்கு கிட்னி போயிடிச்சி, உடம்பு முடியலைன்னு கேள்விப்பட்டதுமே கோயிலுக்கு ஓடிப்போய் பிரார்த்தனை பண்ணுனவங்க நாங்க. நீங்க நூறு வயசு வரைக்கும் நல்லா இருக்கணும். அதுதான் எங்க ஒரே ஆசை. இனிமே நீங்க கட்சி ஆரம்பிச்சா லதா அண்ணிக்கு லாபம். குருமூர்த்திக்கு லாபம். மாரிதாசுக்கு லாபம். தமிழருவி மணியனுக்கு லாபம். அர்ஜூனமூர்த்திக்கு லாபம். பிஜேபிக்கு லாபம். உங்களை கற்பூரம் ஏத்தி கடவுளா வழிபட்ட எங்களுக்கெல்லாம் என்ன லாபம்? தமிழ்நாட்டை பாஜகவுக்கு தாரைவார்த்துட்டு தமிழனையெல்லாம் பிச்சைக்காரனாக்கும் முயற்சிதான் இன்னிக்கு உங்களை முன்வெச்சு நடக்குது. இதுக்கும் மேலே இந்த முயற்சிக்கு நீங்க ஆதரவா இருந்தீங்கன்னா, உங்களை தலைவர்னு கூப்பிடற இதே நாவாலே துரோகின்னுதான் கூப்பிட வேண்டியிருக்கும். உங்க மேலே இருக்கிற அன்புக்காக ஆர்.எஸ்.எஸ்.காரனுக்கு அடிமை வேலை செய்யுறதுக்கு சுயமரியாதை மிக்க எந்த ரசிகனும் தயார் இல்லை. இன்னிக்கு உங்களை சுத்தி நிக்கிறவன் எவனுமே உங்க ரசிகன் கிடையாது. பிணந்தின்னிங்க கூட்டம்தான் உங்களை சூழ்ந்திருக்கு. ஜாக்கிரதையா இருங்க தலைவரே. கொத்திடப் போறானுங்க. உங்களுக்கு எதுவும் ஆகக்கூடாது என்பதுதான் எங்க நோக்கம், நினைப்பு எல்லாம். இதுவரை ரசிகனுக்கோ, தமிழனுக்கோ நீங்க எதுவும் செஞ்சதில்லை. சினிமாவிலே ‘ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா?’ன்னு வெறுமனே வைரமுத்து பாட்டுக்கு வாய்தான் அசைச்சிருக்கீங்க. நிஜமாவே தமிழுக்கும், தமிழனுக்கும் ஏதாவது செய்யணும்னு நெனைச்சா ஆர்.எஸ்.எஸ். அயோக்கியப் பய புள்ளைகளை துரத்தியடிங்க. வர்றதா இருந்தா தனியா வாங்க. முப்பது வருஷத்துக்கும் மேலே உங்களோட இருந்த நாங்களும் வர்றோம். இல்லேன்னா – சொல்லுறதுக்கே நா கூசுது தலைவரே. தாமரையோடு இருந்தீங்கன்னா ஒரே ஒரு தொகுதியிலே கூட உங்க கட்சிக்கு டெபாசிட் கிடைக்காது. நோட்டாவுக்கு போட்டியே நீங்கதான். வேதனையோடு இன்றும் தலைவரின் உண்மை விசுவாசி பரவை பரணி
This logo made for a online magazine, it a voice for a Tamil Indian peoples.

மேலும் கதைகள்